புதிய சாத்திரம் வேண்டல்
ம.ராமதாஸ்
shriramadhas at gmail.com
Wed Nov 15 18:30:47 GMT 2006
புதிய சாத்திரம் வேண்டல்
தமிழ்த் தாய் - தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்
ஆதி சிவன்பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்
மூன்று குலத் தமிழ் மன்னர் - என்னை
மூண்ட நல்லன்பொடு நித்தம் வளர்த்தார்
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்
கள்ளையுஞ் தீயையுஞ் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையுஞ் சேர்த்துத்
தெள்ளுத் தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியஞ் செய்து கொடுத்தார்
சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்துந் துடைத்து முடிப்பான்
நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்பு
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையுங் கொன்று நடப்பான்
கன்னி பருவத்தில் அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெய ருண்டு - பின்னர்
யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்
தந்தை அருள்வலி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கணபட்டுங் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏதுசெய் வேன் ? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்த பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ!
சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்!
தந்தை யருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை யென்று மிருப்பேன்
--
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.
[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20061116/faab1b87/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list